இந்த காலத்தில் அதிக குழந்தைகள் தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? என்று பார்தால் இல்லை என்பதுதான் பதில்.
இந்த காலத்து குழந்தைகள் கடைத்தீனியின் மீது மோகம் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். சத்தில்லாத இந்த உணவுகள் ’ஜங்க் ஃபுட்’ என்று அழைக்கப்படுகிறது. ஜங்க் ஃபுட் சாப்பிடும் குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவதுடன் பசியின்மை, மந்தநிலை, மலச்சிக்கல், பற்சொத்தை, அஜீரண கோளாறு, சீக்கிரம் பூப்படைதல் உள்ளிட்ட பிரச்னைகள் நிகழ்வதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் குறித்த புரிதல் முதலில் பெற்றோரிடம் இருந்து துவங்க வேண்டும். முன்பெல்லாம் குழந்தைகள் தன் தேவைக்கு ஒரு பொருளைக் கேட்டால் அதன் நன்மை, தீமை அறிந்து வாங்கிக் கொடுப்பார்கள் பெற்றோர்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை அடம் பிடிக்கிறது என்பதற்காகவே கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள்.
பெற்றோர்களுக்கும் நல்ல உணவை சமைப்பதற்கான நேரமின்மையால் ஃபாஸ்ட், ஃபுட், ஜங்க் ஃபுட் இவையெல்லாம் நம் உணவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பசியோடு களைத்து வரும் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான நல்ல உணவைக் கொடுப்பது பெற்றோரின் கடமை.
பள்ளியில் இருந்து வீட்டுக்கு குழந்தைகளுக்கு வந்ததும் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் , சீடை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், கடலை உருண்டை, தட்டை, அடை, பனியாரம், பருப்பு வகைகள், உலர் திராட்சை என குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சத்தான உணவுகளை முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்து குழந்தைகளுக்கு தொடுப்பது நல்லது.